செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி 1-வது வார்டு சின்ன புளியம்பட்டி தெருவில் புதிதாக செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த செல்போன் டவர் கட்டுமான பணிகள் நடைபெறும் இடம் மக்கள் அதிகம் உள்ள இடமாக இருப்பதாலும், அப்பகுதியைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள், பள்ளிகள் இருப்பதாலும், கோயில் இருப்பதாலும் இந்த செல்போன் டவரால் உடல் நல பாதிப்பு ஏற்படுவதோடு மன உளைச்சல் ஏற்படுகின்றது.
இந்த செல்போன் டவர் பொது மக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அப்பகுதியில் செல்போன் டவர் கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.
இது குறித்து சின்ன புளியம்பட்டி பொதுமக்கள் அளித்த பேட்டியில், செல்போன் டவர் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. ஏற்கனவே இப்பகுதி மக்கள் கேன்சர் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த செல்போன் டவரை வேறு எங்காவது வைத்துக் கொள்ளட்டும். எங்கள் பகுதியில் செல்போன் டவர் வேண்டாம். இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறினர்.