விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கணேஷ்நகர் அருகே திருச்சுழி சாலையில் சிவன் செராமிக்ஸ் என்ற டைல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். தனது கடையில் உள்ள சரக்கு வாகனங்களுக்கு மாதத் தவணை செலுத்துவதற்காக தினந்தோறும் பணத்தை கடையில் உள்ள உண்டியலில் சேமித்து வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கருப்பசாமி நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு மீண்டும் இன்று காலை கடையை திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் வெளிப்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையில் உள்ளே சென்று பார்த்தபோது கருப்பசாமி உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூபாய் 15 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் உண்டியலை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. அதிகாலை மின்சாரம் தடைபட்ட நேரத்தில் மர்ம நபர்கள் பெரிய கல்லை வைத்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடி சென்றுள்ளனர். கருப்பசாமி தனது கடையில் நான்கு கேமராக்கள் பொருத்தியுள்ளார். இந்த கேமராக்கள் அனைத்தும் இரவு போகும்போது தவறுதலாக ஆப் செய்து வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சிசிடிவி கேமராக்களில் எந்த காட்சியும் பதிவாகவில்லை. இந்த திருட்டு சம்பவம் குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.