பல்லவர் கால கொற்றவை சிற்பம் விழுப்புரத்தில் கண்டெடுப்பு

556பார்த்தது
பல்லவர் கால கொற்றவை சிற்பம் விழுப்புரத்தில் கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டத்தில், பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுார் செல்லும் வழியில், 5வது கி. மீ. , ல், உள்ள பெரும்பாக்கத்தில் தனியார் கொய்யாத்தோப்பில் இருந்து, 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பத்தை, அருப்புக்கோட்டை ஸ்ரீதர் குழுவினர் கண்டெடுத்துஉள்ளனர். ஸ்ரீதர் கூறியதாவது: பாண்டியநாடு பண்பாட்டு மையம் சார்பில், நான், திருவண்ணாமலை ராஜ் பன்னீர்செல்வம், தாமரைகண்ணன், விழுப்புரம் டாக்டர் பாபு, மோகன் ஆகியோர், பெரும்பாக்கத்தில் கள ஆய்வு செய்தோம். அங்கு கொய்யாத்தோப்பில், வேப்பமரத்தின் அடியில், 5 அடி உயரம், 3 அடி அகலம் உள்ள பலகைக்கல், புடைப்புச் சிற்பமாக கொற்றவை இருப்பதை கண்டறிந்தோம். கொற்றவையின் தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பனை ஓலை குண்டலம், கழுத்தில் ஆரம் உள்ளிட்ட அணிகலன்களும், தாலியில் புலிப்பல்லும் உள்ளது. இடையில் கட்டிய ஆடை தொடை வரை நீண்டுள்ளது. அம்பு வைக்கும் அம்புரா துாளி, தோளின் இருபுறமும் உள்ளன. வளையல் அணிந்த எட்டு கைகளில் வலது பக்கம் பிரயோக சக்கரம், வாள், மான்கொம்பு, கயிறு ஆகியவை உள்ளன. இடது கீழ் கை இடையின் மீது ஊன்றி ஊரு முத்திரையுடன் உள்ளது. கால்களில் சிலம்பு அணிந்து, எருமை தலையின் மீது கம்பீரமாக நிற்கும் இது, 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவையாக கருதலாம். இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி