திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி. மு. க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் புதியதாக பிரிக்கப்பட்ட பொழுது அதன் மாவட்ட செயலாளராக செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார். பல்வேறு புகார்கள் அடிப்படையில் செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு மாவட்ட அவைத்தலைவராக இருந்த டாக்டர் சேகரிடம் ஒப்படைக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளராக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து டாக்டர் சேகர் வகித்து வந்த மாவட்ட அவைத் தலைவர் பதவி முன்னாள் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செஞ்சி மஸ்தான் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் டாக்டர் சேகர் முன்னிலையில் திண்டிவனத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி, விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் வெற்றிக்கு உழைத்திட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிக்கு உழைத்திட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் தான் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவி மற்றும் கட்சியின் பதிவேட்டினையும் டாக்டர் சேகரிடம் ஒப்படைத்தார்.