திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் கோவிலில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ருத்ர யாகம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஆலகிராமம் பகுதியில் கோவில் கொண்டுள்ள பிரசித்தி பெற்ற திரிபுரசுந்தரி உடனுறை எமன் பயம் நீக்கும் எமதண்டீஸ்வரர் சிவாலயத்தில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ருத்ர யாகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆலய வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு அதில் பல்வேறு வகையான திரவியங்கள், வாசனைப் பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், நவதானிய பொருட்கள், தேன், பன்னீர், பால், பழங்கள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பூர்ணாஹூதி செலுத்தப்பட்டது. யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பூஜிக்கப்பட்ட கலச நீர் ஆலய வளாகத்தில் உள்ள சித்தர் ஜீவசமாதிக்கும் அதைத் தொடர்ந்து உற்சவர் திரிபுரசுந்தரி மற்றும் எமதண்டீஸ்வரர் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் திரிபுரசுந்தரி அம்மனுக்கு பால், தேன், சர்க்கரை, தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.