வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து வந்த நாய் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் சில குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் சில குட்டிகள் உயிரிழந்தும், காணாமலும் போன நிலையில் கடைகுட்டியான வெள்ளை நிற நாய் குட்டி ஒன்று மட்டும் தன் தாயோடு சுற்றி வந்துள்ளது.
அந்த நாய்க்குட்டியும் நேற்று மாலை (10. 10. 2024) எதிர்பாராத விதமாக ஆட்சியர் அலுவலக வாகனத்தில் அடிப்பட்டு பரிதாபமாக இறந்துள்ளது. ஆனால் குட்டி இறந்தது கூட தெரியாமல், தாய் நாய் பாசப்போராட்டம் நடத்தியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
பல்வேறு வழிகளில், சுமார் 1 மணி நேரம் போராடி தனது குட்டியை அந்த நாய் எழுப்ப முயற்சி செய்தது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த பலரும் உச்சுகொட்டி நகர்ந்து சென்ற நிலையில் தாய் நாயின் பரிதவிப்பை பார்த்த ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 2 பெண்கள் முதலில் தாய் நாய்க்கு உணவு கொடுத்து, பின்னர் இறந்து கிடந்த நாய்க்குட்டியை எடுத்து சென்று ஆட்சியர் அலுவகத்திற்கு பின்புறம் மண்தோட்டி புதைத்தனர். அப்போது தாய், நாயும் உடன் சென்றது.
நாய்க்குட்டியை புதைத்து விட்டு இரு பெண்களும் சென்றுவிட்ட நிலையில் தாய் நாய் அந்த இடத்தை விட்டு செல்லாமல், ஓலமிட்டு பல மணி நேரம் அங்கேயே சுற்றி வந்தது. தாய் நாயின் இந்த பாசப்போராட்ட காட்சிகளை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.