திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன், தேசத்து மாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 10க்கும் மேற்பட்ட நாய்கள் சண்டையிட்டு கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் தன் இரு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வீதியில் சண்டையிட்டு கொண்டிருந்த நாய்கள் கூட்டம் இரு சக்கர வாகனத்தின் முன்பு திடீரென குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் கீழே விழுந்தனர்.
இதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த சரவணன் என்பவரை நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் குதறியது. இதைக் கண்டு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் அவர்களை காப்பாற்ற வந்துள்ளார் அப்போது பாலாஜியையும் நாய்கள் கடித்தது.
உடனடியாக அந்த பகுதியில் மக்கள் காயமடைந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
மேலும் அந்தப் பகுதிகளில் அதிகமாக நாய்கள் சுற்றித் திரிவதால் அவ்வப்போது அவ்வழியாக செல்பவர்களையும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் நாய்கள் துரத்தி கடிப்பதாகவும், நாய்களைப் பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.