வேலூர் காட்பாடி அடுத்த தாராபடவேடு பகுதியில் சாலையோரம் பழமையான கட்டிடத்தில் குவாலிட்டி ஹார்டுவேர் என்ற பெயரில் இரும்பு உதிரி பாகங்கள் கடை செயல்பட்டு வருகிறது. கடையின் முன்பாக இன்று சாலையோரம் சைக்கிளில் கிளிதான் பட்டறையைச் சேர்ந்த 70 வயது முதியவர் பாஸ்கர் சென்று கொண்டிருந்தபோது ஹார்டுவேர் கடையின் முகப்பு மேற்கூரை இடிந்து முதியவர் மீது விழுந்துள்ளது. அதில் முதியவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
சிசிடிவி காட்சியில் முதியவர் மீது மேற்கூரை இடிந்து விழுவதும், அப்போது இரு பெண்கள் நூலிலையில் தப்பி ஓடியுள்ளதும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காட்பாடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து காரணமாக காட்பாடி வேலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.