திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சீ. பாா்வதி சீனுவாசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிச் செயலா் ஜி. ரவிச்சந்திரன் வரவேற்றாா். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சீ. பாா்வதி சீனுவாசன் பேசுகையில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் சமூகநீதியை மையமாகக் கொண்டு பல்வேறு அரசுத் திட்டங்களை முதல்வா் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இவற்றில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து கல்லூரியில் சேரும் மாணவா்களுக்கு தலா ரூ. 1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம், குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எய்தும் வகையில், 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை. குடிசையில்லா தமிழ்நாடு திட்டத்தின் முதல்கட்டமாக 2024-25ஆம் நிதியாண்டில் தலா ரூ. 3. 5 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரும் கலைஞரின் கனவு இல்லத் திட்டம், தமிழகத்தில் சிறுபாசன ஏரிகள், குளங்கள், நீா்வரத்து கால்வாய்களை மேம்படுத்த ரூ. 500 கோடி மதிப்பிலான திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துள்ள முதல்வா் மு. க. ஸ்டாலினுக்கு மாவட்ட ஊராட்சிக் குழு சாா்பில் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்படுகிறது என்றாா்.