10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக செய்யாறு கல்வி மாவட்டத்தில் 60, திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 87 என திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 147 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 15 ஆயிரத்து 810 மாணவர்கள், 14 ஆயிரத்து 854 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 664 பேர் தேர்வு எழுதினர். தேர்வுப் பணியில் 151 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 152 துறை அலுவலர்கள், 173 பறக்கும் படையினர், 2 ஆயிரத்து 397 அறை கண்காணிப்பாளர்கள், 535 சொல்வதை எழுதுபவர்கள், 35 வழித்தட அலுவலர்கள், 5 தொடர்பு அலுவலர்கள், 147 எழுத்தர்கள், 147 அலுவலக உதவியாளர் என மொத்தம் 3 ஆயிரத்து 742 பேர் ஈடுபட்டனர்.
இதுதவிர, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் தரைத் தளத்திலேயே தேர்வு எழுத போதிய அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் சொல்வதை எழுதுவதற்காக 535 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தேர்வு அறைகளில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்டக் கல்வி அலுவலர் காளிதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.