திருவண்ணாமலையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ. 3,500 கொடுக்க வேண்டும். கரும்புக்கு டன்னுக்கு ரூ. 5,000 கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே மாநாடுகளை நடத்தி வருகிறோம். உழவர் பேரியக்க மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து விவசாய சங்கங்களும் பங்கேற்க வேண்டும். இந்த மாநாடு மூலம் ஒரு திருப்புமுனை ஏற்படும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் இன்னும் போய் சேரவில்லை. எல்லோரும் கஷ்டத்தில் உள்ளனர்.
சாத்தனூர் அணையிலிருந்து முன்னறிவிப்பின்றி அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் 19 பேர் இறந்தனர். சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணமாக தரும் அரசு, வட மாவட்டங்களுக்கு ரூ. 2 ஆயிரம் மட்டுமே வழங்குவது பாரபட்சமான செயலாகும். நிகழாண்டில் 18 நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை நடைபெற்றுள்ளது. இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்று கூறினார்.