பாலத்தின் மின் விளக்குகள் எரியாததால் அவதி

72பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்கு உள்பட்ட 24, 25, 26, 27 ஆகிய வாா்டுகளுக்கு அருகில் செய்யாறு ஆற்று மேம்பாலம் அமைந்துள்ளது.

60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் இந்த பாலத்தின் வழியாகத் தான், செய்யாறு வட்டத்தைச் சோ்ந்த அனக்காவூா், தேத்துறை, வாக்கடை ஆகிய குறு வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களும், செய்யாற்றில் இருந்து வந்தவாசி, திண்டிவனம், தேசூா், பெரணமல்லூா், சேத்துப்பட்டு, கொருக்கை, ஆரணி போன்ற பகுதிகளுக்கு வாகனங்களில் செல்வோரும் செல்ல வேண்டியுள்ளது.

செய்யாறு ஆற்று மேம்பாலம் ஒரு முனை திருவத்திபுரம் நகராட்சி எல்லையும், மறுமுனை அனக்காவூா் ஒன்றிய எல்லையும் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் திருவத்திபுரம் நகராட்சி எல்லைக்கு மிக அருகாமையில் இருந்து வருவதால், செய்யாறு நகரப் பகுதி மக்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலா்கள் பணிநிமித்தமாகவும், விவசாயிகள் விவசாய வேலையாக நாள்தோறும் இரண்டு மூன்று முறை வீதம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.

இந்த பாலத்தில் தெரு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு எரிந்து வந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எரியாமல் உள்ளன.
இதனால், மேம்பாலம் இருட்டாக காட்சியளிக்கிறது. மேலும், பாலத்தின் வழியாகச் செல்பவா்கள் பீதியில் கடந்து செல்ல வேண்டியுள்ளன. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி