அரசின் இலவச சேலைகள் குடோனில் பதுக்கி வைப்பு- குடோனுக்கு சீல்

59பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ளது பொன்னூர். இங்கு நெசவாளர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் அரசு மக்களுக்கு வழங்கக்கூடிய அரசின் இலவச சேலைகள் நெய்யப்பட்டு அரசிடம் வழங்கப்படும். இதற்காக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தரமான நூல்கள் இந்த கூட்டுறவு சங்கம் மூலமாக நெசவாளர்களுக்கு வழங்கப்படும். இந்த நூல் நெசவாளர்களுக்கு வழங்கப்படாததால் வேலையின்றி நெசவாளர்கள் தவித்து வருகின்றனர்.
ஆனால் வந்தவாசி நகரப்பகுதியில் திருநீலகண்டர் தெருவில் உள்ள குடோனில் அரசுக்கு சொந்தமான வேட்டி சேலைகள் பதுக்கி வைத்திருப்பதாக, பொன்னூர் நெசவாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறை உதவியுடன் வருவாய்த்துறையினர் சென்று பார்த்தபோது ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள சேலைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. குடோனின் உரிமையாளரான சபரிராஜன் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பொன்னூர் கூட்டுறவு சங்க மேலாளர் ராணி என்பவரின் பெயரைக்கூறவே, அவரை தொடர்பு கொண்டு வருவாய்த்துறையினர் கேட்ட பொழுது எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மேலாளர் ராணி சொல்லியதாக கூறப்படுகிறது. எனவே வருவாய்த் துறையினர் மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்தகுமார் முன்னிலையில் குடோனுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

தொடர்புடைய செய்தி