திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதிக்கு திருமூர்த்தி அணையின் மூலமாக நாள்தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டாரை வைத்து தண்ணீரை உறிஞ்சி தற்செயலான குடிநீர் பற்றாக்குறையை ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
இது குறித்த அறிவிப்பில் நிர்வாகம் கூறியுள்ளதாவது, நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 1 முதல் 33 வார்டுகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடிநீர் குழாய் இணைப்பில் மின்மோட்டாரை வைத்து நேரடியாக உறிஞ்சுவது தெரிய வருகிறது. இதனால் சீரான குடிநீர் விநியோகம் தடைபடுகிறது.
மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது நகராட்சி சட்டப்படி குற்றமாகும். மேலும் கோடைகாலம் என்பதால் இதுபோன்று செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் குடிநீர் விநியோக உபவிதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுமட்டுமின்றி மின்மோட்டார் பயன்படுத்தி குடிநீர் எடுப்பவர்கள் மின்மோட்டாரை பறிமுதல் செய்து, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். எனவே மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.