நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து விநாயகர் விசர்ஜனம் பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசரஜன ஊர்வலம் நேற்று(செப்.10) நடைபெற்றது. இந்த விழாவை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழகம் முழுவதும் மது கடைகளால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். திமுக வந்தவுடன் மது ஒழிப்பு நடைபெறும் என்று கூறினார்கள். ஆனால் தற்பொழுது மதுக்கடைகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. பள்ளி கல்லூரிகள் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.
சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டது. ஜனநாயக நாட்டில் யாருக்கு வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். மக்களின் ஆதரவு யாருக்கு என்பது மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு மிகப்பெரிய ஆன்மீக பூமி, கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் விநாயகரை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆண்ட பூமி தமிழக பூமி. இங்கு போலி திராவிடத்திற்கு இடமில்லை என்றார்.