திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக வடக்கு தொகுதி சார்பில் S.V. காலனி பகுதியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 20வது வட்டக் கழக செயலாளர் வழக்கறிஞர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழக செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி வி. ஜெயராமன், முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றி அதிமுக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் பேசுகையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா பாதையில் தற்போது புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி பயணித்து வருகின்றார். அடிமட்ட தொண்டனாக அதிமுகவில் பயணித்து இப்பொழுது முதல்வர் வரை உயர்ந்துள்ளார்.
சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த எடப்பாடியார் நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். நீட் தேர்வால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக 7.5% கொண்டு வந்து, அவர்களையும் இலவசமாக மருத்துவ படிப்பில் படிக்க வைத்து சாதனை படைத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என்றார்.