திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக இரண்டு மாநிலங்களுக்கு இடையே பஸ், சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கேரளா வனப்பகுதியில் மறையூர்- சின்னாருக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை சேதமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அதைத் தொடர்ந்து சாலையை சீரமைத்து தருமாறு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
இந்த சூழலில் கடந்த மாதம் 28-ம் தேதி முதல் சாலை சீரமைப்பணி தொடங்கி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முதல் கட்ட பணிகள் முடிவடைந்து 2-ம் கட்ட பணிகள் நாளை (செவ்வாய்கிழமை) முதல் தொடங்குகிறது. இதன் காரணமாக நாளை முதல் 10 நாட்களுக்கு மோட்டார் சைக்கிள் உட்பட அனைத்து வாகனங்களும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை உடுமலை-மூணார் சாலையில் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என கேரளா பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக வனப்பகுதியில் சின்னாறு சோதனை சாவடி வரை போக்குவரத்து எப்போதும் போல் நடைபெறும். இதனால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைய வேண்டாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.