திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூரில்
தமிழ்நாடு முன்னாள் மறைந்த முதல்-அமைச்சர் மு. கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூலனூர் ஊராட்சி பகுதியில் திருப்பூர் திமுக தெற்கு மாவட்டம் மூலனூர் பேரூர் மற்றும் நகர ஒன்றிய தி. மு. க. சார்பில் 1-ம் ஆண்டு ரேக்ளா போட்டி நடத்தப்பட்டது.
போட்டியை திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் இ. கே. பிரகாஷ், மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பங்கேற்பதற்காக தாராபுரம் காங்கயம், பொள்ளாச்சி, , ஒட்டன்சத்திரம், கரூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் மூலனூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. போட்டி 200 மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் 200 மீட்டர் பிரிவில் 400 வண்டிகளும், 300 மீட்டர் பிரிவில் 100 வண்டிகளும் கலந்துகொண்டது.
அதைத்தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படி மாட்டு வண்டிகள் அழைக்கப்பட்டது. இதையடுத்து வண்டிகளில் பூட்டப்பட்ட மாடுகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தது. போட்டியை பொதுமக்கள் பாதுகாப்பாக பார்த்து ரசிக்கும் வகையில் மூலனூர்-கரூர் சாலையின் இரண்டு புறங்களில் இரும்பு தடுப்புகள் வைத்து கட்டப்பட்டு பாதுகாப்பாக நடைபெற்றது.