ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியார் வங்கி உதவி மேலாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவர்மலை பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் ஜெயக்குமார் (வயது 33). இவர், ஈரோடு மாவட்டம், முத்தூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தார். ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை அவர் இழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த ஜெயக்குமார் தற்கொலைக்கு முயன்று வந்துள்ளார். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நேற்று வந்தார். பிற்பகல் 3 மணி அளவில் அந்த வழியாக சென்ற ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட ஜெயக்குமாருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050.