திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் மூலமாக 0 வயது முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று (டிசம்பர் 23) நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு துறையூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகு கலந்து கொண்டு முகாமின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். அப்போது நடைபெற்ற முகாமில் துறையூர் அரசு மருத்துவமனை முட நீக்கியல் மருத்துவர் டாக்டர் குமார், மனநல மருத்துவர் அன்பழகன், காது மூக்கு தொண்டை மருத்துவர் கீதா, சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் செந்தில், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இதில் கலந்துகொண்ட பயனாளர்களுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை உடனே வழங்கப்பட்டது. முகாமில் மொத்தம் 100 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். முகாமிற்கான ஏற்பாட்டினை ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். இறுதியில் ஆசிரியர் பயிற்றுனர் தமிழ்மாறன் நன்றி கூறினார்.