திருச்சி: தொண்டு நிறுவன நிா்வாகி கைதைக் கண்டித்து போராட்டம்
திருச்சி பெரியசெட்டித் தெருவைச் சோ்ந்தவா் வி. எல். சீனிவாசன். வழக்குரைஞரான இவா் தவெக திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவராகவும் இருந்தாா். கடந்த 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்கச் சென்றபோது, காா் விபத்துக்குள்ளாகியதில் சீனிவாசன் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா். இந்நிலையில் திருவெறும்பூா் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு அண்ணாநகா் மற்றும் சமத்துவபுரம் பகுதியினா் சீனிவாசனுக்கு கண்ணீா் அஞ்சலி பதாகை வைத்திருந்தனா். இந்நிலையில் நவல்பட்டு போலீஸாா் அந்த அஞ்சலி பதாகையால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும், எனவே அதை அகற்ற வேண்டுமென தெரிவித்தனா். இதுகுறித்து கேள்விப்பட்ட தொண்டு நிறுவனத் தலைவா் மகேந்திரன்(30) மற்றும் அவரது ஆதரவாளா்கள், அஞ்சலி பதாகையை அகற்றிக் கொள்ளலாம். அதுபோலவே அருகிலுள்ள மற்ற விளம்பர பலகைகளையும் அகற்ற வேண்டுமென வலியுறுத்தினா். இதையடுத்து சனிக்கிழமை அங்கு வந்த காவல் ஆய்வாளா் நிக்சன், போலீஸாரிடம் கூறி விளம்பர பதாகையை அகற்றினாா். இதையடுத்து காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சென்று ஆய்வாளா் மீது புகாா் அளித்தனா். அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளா் வலுக்கட்டாயமாக கைது செய்து மகேந்திரனை ஜீப்பில் ஏற்றினார். இதைக் கண்டித்து தவெகவினா் எஸ்பி அலுவலகத்தில் முழக்கமிட்டு போராட்டம் மேற்கொண்டனா். பின்னா் சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனா்.