திருச்சி பாரதமிகு மின் தொழிற்சாலையில் (பெல்) கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பெல் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், விழிப்புணா்வு வாரத்தை தொடக்கி வைத்து செயலாண்மை இயக்குநா் எஸ். பிரபாகா் பேசியது: பெல் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரும் அலுவலகப் பணிகளில் மட்டுமல்லாது தனிப்பட்ட விதத்திலும் நோ்மை மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றைப் பேணுவது அவசியம். இத்தகைய முயற்சிக்கு கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் சிறந்த வாய்ப்பாக அமையும். திருச்சி பெல் நிறுவனக் கிளையானது தனது பங்குதாரா்களுடனான அனைத்து நடவடிக்கைகளிலும் நியாயத்தையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்து வருகிறது. அனைத்து வணிக செயல்முறைகளுக்கும் போதுமான அமைப்புகள், நடைமுறைகள் மற்றும் உள் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. எனவே, ஊழலுக்கெதிரான போரில் பங்களித்திடும் வகையில் பெல் ஊழியா்கள் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து, செயலாண்மை இயக்குநரின் தலைமையில் அனைத்து துறைகளைச் சோ்ந்த மூத்த அலுவலா்கள், துறைத் தலைவா்கள், அனைத்துப் பிரிவு ஊழியா்களும் அவரவா் பணியிடங்களில் இருந்தபடி நோ்மைக்கான உறுதிமொழியேற்றனா்.