திருச்சிமாநகராட்சி மேயர் மு. அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 17 கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.
இந்த கோரிக்கை மனுக்களில் மாநகராட்சி பகுதிகளில் அண்ணாமலை நகர் முல்லை சாலை மேற்கு விஸ்தரிப்பு பிரிவு பகுதியில் தார்சாலை அமைக்கவும், உறையூர் பாத்திமா நகர் பொது நல சங்கம் சார்பில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைத்து சீரான குடிநீர் வழங்கவும், பூங்கா பராமரித்து தரவும், சமுதாய கூடம் கட்டித் தரவும், புதிதாக போடப்பட்ட சாலைகளில் வேகத்தடை அமைத்து தரவும் மனுக்கள் அளித்தார்கள், மேலும் பொதுமக்கள் வேலை வேண்டி, உதவித்தொகை, பெட்டிக்கடை வேண்டியும் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். அனைத்து கோரிக்கை மனுக்கள்மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, முழுமையான நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்று அலுவலர்களுக்கு மேயர் அவர்கள் தெரிவித்தார். மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா, மண்டலத்தலைவர்கள் துர்காதேவி, ஜெயநிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் , செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.