காவல் அதிகாரிகள், பெண் போலீஸாா் குறித்து அவதூறாக பேட்டியளித்த யூடியூபா் சவுக்கு சங்கா் (48) மீது மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. அந்த வகையில் திருச்சி மாவட்டம் லால்குடி டிஎஸ்பி கொடுத்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலைய பெண் அதிகாரி கொடுத்த புகாரில் மற்றொரு வழக்கும் பதிவானது.
முதல் வழக்கில் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் நிலையில், இரண்டாவது வழக்கில் புழல் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கா் மீது சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, திருச்சி கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த கூடுதல் மகளிா் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியும், மாவட்ட மூன்றாவது உரிமையியல் நீதிபதியுமான ஜெயப்பிரதா சவுக்கு சங்கரை பிணையில் (ஜாமீன்) செல்ல அனுமதித்தாா்.
மேலும் ஜூன் 11-க்குள் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான இரு நபா் பிணையப் பத்திரத்தை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் பிணை வழங்கப்பட்டாலும், மேலும் சில வழக்குகள் காரணமாக தற்போது சவுக்கு சங்கா் சிறையிலிலிருந்து வெளியே வர இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.