துறையூரில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கைது
திருச்சி மாவட்டம் துறையூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவல் நிலையத்தை பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கைது செய்யப்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். விவசாயப் பணிகளுக்காக விவசாயிகள் வங்கிகளில் கடன் உதவி பெற்று டிராக்டர் ஜேசிபி நெல் அறுவடை இயந்திரம் டிராக்டர் டிப்பர் லாரி உள்ளிட்ட வாகனங்களை வாங்கி விவசாய பணிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில தவணைகள் கட்ட முடியாவிட்டாலும் வங்கி ஊழியர்கள் அவர்களிடம் உள்ள கூடுதல் சாவியை கொண்டு வாகனங்களை உரிமையாளருக்கு தெரியாமல் எடுத்துச் சென்று விடுகின்றனர். இது பற்றி காவல் நிலையம் சென்று சம்பந்தப்பட்ட விவசாயி புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதை கண்டித்து விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துறையூர் காவல் நிலையத்தை பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இது தொடர்ந்து துறையூர் போலீசார் காவல் நிலையம் பேருந்து நிலையம் முசிறி பிரிவு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு காவல் நிலையத்தை பூட்டு போட காவல் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த அய்யாக்கண்ணுவை துறையூர் பிரிவு ரோடு ரவுண்டானாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.