நேற்று 'ஸ்வேதா பாலகிருஷ்ணன்' என்ற பெயரில் அந்தந்த பள்ளி, கல்லூரிகளுக்கு வந்த இ-மெயிலானது 'உங்களது பள்ளி, கல்லூரியில் வெடிகுண்டு வெடிக்கும்' என்று அனுப்பப்பட்டிருந்தது. அதையடுத்து, இமெயில் அனுப்பப்பட்ட, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, ஹோலி கிராஸ் பெண்கள் பள்ளி உள்ளிட்ட எட்டு இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இறுதியில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் நேற்று வந்த அதே 'ஸ்வேதா பாலகிருஷ்ணன்'என்ற பெயரில் இன்று அதிகாலையில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, ஹோலி கிராஸ் பெண்கள் பள்ளி மற்றும் பெண்கள் கல்லூரி, சமது மேல்நிலைப்பள்ளி, உள்ளிட்ட 6 இடங்களில் 'உங்களது பள்ளி, கல்லூரியில் வெடிகுண்டு வெடிக்கும்' என்று மீண்டும் மிரட்டல் மின்னஞ்சல் வந்திருந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள் அனைத்தும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகும். இன்று பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் போலீசார், வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்