மணப்பாறை அருகே புகழ்பெற்ற குளக்கரை கருப்பசாமி கோவிலில் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் நிகழ்ச்சி நள்ளிரவில் மெய்சிலிர்க்க வைத்த தத்ரூப நிகழ்வு. வரலாற்று நிகழ்வைக்கான திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் அருள்மிகு கன்னிமாரம்மன் கோவில் உள்ளது. பொன்னர் - சங்கர் தங்காள், பெரியகாண்டியம்மன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களை கொண்ட புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப் பெருந்திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி 27 ம் தேதி திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அண்ணன்மார் படுகளம் சாய்தல் பின் எழுப்புதல் எனும் தத்ரூப நிகழ்ச்சி படுகளத்தில் உள்ள குளக்கரை கருப்பசாமி கோவிலில் நடைபெற்றது. நள்ளிரவில் பலரும் திடீர் திடீரென மயங்கி விழவே உடனே அங்கு கோவில் தொண்டாற்றும் ஊழியர்கள் மயங்கியவர்களை தூக்கி வந்து ஆலயம் முன்பு வரிசையாக படுக்க வைத்து மஞ்சள் துணியை போர்த்தி வைத்தனர். இதையடுத்து அதிகாலை அம்மன் பூ பல்லக்கில் பவனி வந்த பின் மயங்கிய நிலையில் படுக்கவைக்கப்பட்டிருந்தவர்கள் மீது தீர்த்தம் தெளிக்கவே, தங்கள் மீது தீர்த்தம் பட்டதும் படுத்திருந்தவர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டு எழுந்து சென்றனர். இதையடுத்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.