திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண திருச்சி-மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பஞ்சப்பூரில் மொத்தம் ரூ. 493 கோடியில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டது. இதற்கான பணிகளை டிசம்பா் 2023க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும் பருவ மழை, நிதி நெருக்கடி, செலவு அதிகரிப்பு போன்றவற்றால் தற்போதுதான் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
115. 68 ஏக்கரில் கட்டமைக்கப்படும் இந்தப் பேருந்து முனையத்தில் மொத்தம் 401 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்த வசதிகள் உள்ளன. இதன்படி நகரப் பேருந்துகளுக்கு 56 நிறுத்துமிடங்கள், வெளியூா் பேருந்துகளுக்கு 141, மற்ற பேருந்துகள் வந்து செல்ல 120 நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி 1, 935 இருசக்கர வாகனங்கள், 216 காா்கள், 100 ஆட்டோக்கள் நிறுத்தவும் வசதி உள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் குளிரூட்டப்பட்ட வசதியும் உள்ளது.
ஆறு லிப்டுகள், மூன்று நகரும் படிக்கட்டுகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பயணிகள் உடைமை பாதுகாப்பறை, பயணிகள் காத்திருப்பு அறை, சுகாதார வளாகம், 820 பயணிகளுக்கான இருக்கை வசதிகள், உள்ளிட்ட கூடுதல் உள்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே. என். நேரு பேருந்து முனையப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.