திருச்சி மாவட்டம் குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் வைணவ கோயில்களில் பிரசித்திபெற்றதாகும். திருப்பதிக்கு சென்று வணங்கினால் கிடைக்கும் சுவாமியின் அருள் குணசீலம் பெருமாள் கோயிலை வணங்கினால் கிடைக்கும் என்று கருதப்படுவதால் இது தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் புரட்டாசிமாதம் திருவோணம் நட்சத்திரத்தில் நடைபெற்றுவரும் பிரம்மோற்சவம் தேர்திருவிழா கடந்த 04- ம்தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தினசரி பல்வேறு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதிஉலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். பிரம்மோற்சவ விழாவில் 7-ம் நாளான நேற்றைய தினம்(அக்.10) மாலை திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்புடன் நடைபெற்றது.
ஸ்ரீபெருமாள் உபயநாச்சியார்களுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, மங்கள வாத்தியங்கள் முழங்கிட பட்டாச்சாரியார்கள் மாங்கல்ய தாரம் எனும் திருக்கல்யாண வைபவம் நிகழ்வினை நடத்தினர். ஸ்ரீதேவி பூமிதேவி சமேதராக திருக்கல்யாண மஹோற்சவத்தில் பெருமாள் எழுந்தருளும் பட்சத்தில் இல்லங்கள் தோறும் மங்கலம் பெருகவும் எல்லா செல்வங்களுடன், மன அமைதியுடன் நல்வாழ்வை பெருமாள் அருள்வார் என்பதால் திரளான பக்தர்கள் தரிசித்துச் சென்றனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12 ம் தேதி காலை நடைபெறுகிறது.