திருச்சி கேகே நகரைச் சேர்ந்தவர் சாந்தா (78). இவர், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார்புரம் அருகே இந்தியன் வங்கிக் காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே தனது மகனுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், சாந்தா அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை திடீரென பறித்துச் சென்றனர். உடனடியாக இதுகுறித்து கே.கே. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாநகரக் காவல் ஆணையர் என்.காமினி உத்தரவின்பேரில், நகைப்பறித்தவர்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இதில், திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த டி.அஜித் என்கிற ஏழுமலை (28), எஸ்.வேலுசாமி (48) ஆகியோர் நகை பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அடுத்த சில மணி நேரத்தில் அவர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலியை மீட்டு, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.