கன மழை, வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை போர்க்கால அடிப்படையில் புணரமைக்க வேண்டும் என்று எம்பவர்
இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளிகள் மேலாண்மை ஆலோசனைக்குழு ஆ. சங்கர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், "கன மழை, வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோயாளிகளை பரிசோதிக்கும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கேத்தரிசேசன் லேப் என்ற உபகரணம் முற்றிலுமாக பழுதடைந்துள்ளது.
இதனால் இருதய நோயாளிகள் பரிசோதனைக்காக திருநெல்வேலி மற்றும் மதுரை மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மேலும் மேலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே உடனடியாக மேற்கண்ட உபகரணத்தை சீரமைக்க உரிய ஆணை பிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.