விவசாயிகளை கடித்து குதறிய காட்டுப்பன்றி அடித்து கொலை?
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (62). விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். தற்போது பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து கதிர் பிடிக்கும் தருவாயில் உள்ளன. நேற்று காலையில் மோகன்ராஜ் தனது விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது காட்டுப்பன்றி மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திக் கொண்டிருந்தது. உடனே மோகன்ராஜ் காட்டுப்பன்றியை விரட்ட முயன்றார். அவரைக் கண்டதும் காட்டுப்பன்றி ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து அவரை தாக்கியது. அவரது கையிலும் கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த மோகன்ராஜ் கூச்சலிட்டார். மேலும் செல்போன் மூலம் பக்கத்து தோட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கும் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளான சண்முகராஜ் (54) ராமசாமி (62) ஆகியோரும் காட்டுப்பன்றியை விரட்ட முயன்றனர். அவர்களையும் காட்டுப்பன்றி தாக்கியது. அவர்களது கை, கால்களிலும் கடித்து குதறியது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காட்டுப்பன்றியை விரட்டினர். படுகாயமடைந்த 3 விவசாயிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.