கோவில்பட்டி: பைக் மீது மினி லாரி மோதி விபத்து: வாலிபர் பலி

58பார்த்தது
கோவில்பட்டி: பைக் மீது மினி லாரி மோதி விபத்து: வாலிபர் பலி
கோவில்பட்டியில் பைக் மீது மினி லாரி மோதி விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பூசாரிப்பட்டி நாடார் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் ரமேஷ் (34). இவர் மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள பழக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 

இவருக்கு திருமணமாகி ஜெயசிலி என்ற மனைவியும், பிறந்து மூன்று மாதமான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர் நேற்று காலையில் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். கடலையூர் ரோட்டில் உள்ள சண்முகாநகர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற மினி லாரி எவ்வித சிக்னலும் இல்லாமல் திடீரென வலது பக்கம் திரும்பியதில் ரமேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரமேஷ் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, மினி லாரி டிரைவரான திருவேங்கடம் குண்டம்பட்டி வடக்கு காலனியை சேர்ந்த முத்துவீரப்பன் மகன் முருகானந்தத்தை (24) பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி