கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட நல்லவழாம்பேத்தி ஆற்றங்கரை அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஹரிஹர உத்தர அய்யனார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் மிகவும் பிரசித்தி பெற்ற நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாக திகழ்ந்துவருகிறது. கிராமத்தின் காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் கிராமத்தில் அய்யனார் சுவாமி அருள் பாலித்து வருகிறார். ஸ்ரீ வீரன் ஸ்ரீ சப்த கன்னியம்மன் ஆகிய பரிவார தெய்வங்களும் அருள் பாலித்து வருகின்றனர்.
மேலும் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் ஆலயத்தின் திருப்பணி செய்வதற்காக முடிவெடுத்து அதற்கான திருப்பணிகள் தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுற்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி மகா கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோ பூஜை முதல் கால பூஜை இரண்டாம் கால யாக பூஜைகள் முடிவுற்று இன்று(செப்.10) காலை மகாபூர்ணகதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்களுடன் புனித கடங்களை தலையில் சுமந்தவாறு ஆலயத்தை சுற்றி வலம் வந்து கடங்களில் இருந்த புனித நீர் கும்பத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.