நன்னிலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் பல்கலைக்கழக தேர்வு கட்டணத்தை பல்கலைக்கழக நிர்வாகம் கூடுதலாக உயர்த்தியது. இதனை கண்டிக்கு வகையில் மாணவ மாணவியர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணத்தை கூடுதலாக உயர்த்தி கடந்த ஏழாம் தேதி பல்கலைக்கழக நிர்வாகம் ஆணையிட்டுள்ளது.
இளங்கலை பிரிவிற்கு தேர்வு கட்டணம் 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்திய பல்கலைக்கழக நிர்வாகம் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு 150 ரூபாயிலிருந்து 175 ரூபாயாகவும், இளநிலை செய்முறை தேர்வுக்கான கட்டணம் 100 ரூபாயிலிருந்து 140 ரூபாயும், மற்றும் தற்காலிக சான்றிதழ் கட்டணம் 200 ரூபாயிலிருந்து 350 ரூபாயும் மொத்த மதிப்பெண் சான்றிதழ் 200 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகம் முன்பு உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை கண்டித்து பதாகைகள் ஏந்தி இந்திய மாணவர் சங்கத்தினருடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.