கடம்பத்தூர் அடுத்த வயலூர் கிராமத்தில்1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேமாத்தம்மன் மந்தவெளி அம்மன் மற்றும் விக்ன விநாயகர், பீமேஸ்வரர் சொர்ணாம்பிகை, நவகிரக உள்ளிட்ட ஐந்து கோவில்களும் புதிதாக புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அனைத்து கோயில்களும் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கோவில் புதுப்பிக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் ஐந்து கோயில்களுக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த மாதம் வியாழக்கிழமை 27 ந் தேதி தொடங்கியது.
சேமாத்தம்மன் கோவில் வளாகத்தில் 33 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து லட்சுமி பூஜை, கோமாதா பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணா தகுதி துபாய் நைவேத்தியம் ஆராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவான இன்று காலை ஆறு கால யாக கால பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் 9. 30 மணிக்கு பட்டாச்சாரர்கள் யாக சாலையிலிருந்து புனிதநீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து மேள தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து பின்னர் ஒரே நேரத்தில் 5 கோவில்களின் கோபுர விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.