சென்னை முதல் திருப்பதி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சிடிஎச் சாலையை அகலப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிகவளாகங்கள், குடியிருப்புகள், கட்சி அலுவலகங்கள், கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகள் என அனைத்தையும் அகற்றும் பணியில் திருவள்ளுவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காக்களூர் பகுதியில் சிடிஎச் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 17 வீடுகளை காவல்துறையினர் உதவியுடன் ஜேசிபி எந்திரங்களைக் கொண்டு இடித்து அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று ஈடுபட்டனர். இதில் வீடுகள் இடிக்கப்பட்டதால் வீட்டு உபயோகப் பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர், அடுப்பு, உணவுப் பொருட்கள், துணிமணிகள் உடன் நடுவீதியில் பொதுமக்கள் இடிக்கப்படும் தங்களது வீடுகளைப் பார்த்தவண்ணம் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தனர். தங்களது வீட்டை இடித்த அதிகாரிகள் உரிய மாற்று இடம் வழங்காமல் தடாலடியாக வீட்டை இடித்து அகற்றியதால் செய்வதறியாது வேதனையுடன் தவித்து நின்றனர். இதேபோன்று ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்ததாக கூறி இரண்டு கடைகளும், நான்கு குடியிருப்புகளும், தாண்டி இருந்த தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகமும் இடித்து அகற்றப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.