சடலங்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லும் அவலம்

54பார்த்தது
திருத்தணி குமாரகுப்பம் அருந்ததி காலனியில் 50க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு அருகில் மயானம் உள்ளது. இருப்பினும் சாலை வசதி இல்லாத நிலையில், விவசாய நிலங்களில் வரப்பு மீது சடலங்கள் எடுத்துச்சென்று  மயானத்தில் இறுதி சடங்கு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் இறந்தார். மாலை அவரது சடலத்தை உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் ஊர்வலமாக விவசாய நிலங்களில் வரப்பு மீது மயானத்திற்கு எடுத்துச்செல்ல கடும் அவதி அடைந்தனர். 30 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் அருகில் உள்ள மயானத்திற்கு சடலம் எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாத நிலையில் வரப்பு மற்றும் விவசாய நிலங்களில் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. விவசாய நிலங்களில் சடலம் எடுத்துச் செல்ல விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.   கிராமத்திலிருந்து அரை கி. மீ தூரத்தில் உள்ள மயானத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என்று நகராட்சி அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் பலமுறை வழங்கினோம். விவசாயிகள் ஒருசிலர் சாலை அமைக்க நிலம் தர முன் வருகின்றனர். இருப்பினும் அரசு உரிய முயற்சி எடுத்து நிலம் கையகப்படுத்தி சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுவதால், 30 ஆண்டுகளாக  இறுதி ஊர்வலத்திற்கும் சாலை வசதியின்றி அவதிப்படுவதாக அருந்ததி காலனி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி