உற்சாகத்தில் தோகை விரித்தாடிய மயில்

72பார்த்தது
திருத்தணி அருகே தொடர் மழை காரணமாக அதிகாலை நேரங்களில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே, சீதோஷ்ண மாற்றத்தில் உற்சாகமான ஆண்மயில் தோகை விரித்தாடியது. இதை கிராம மக்கள் வெகுவாக கண்டு ரசித்தனர். திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் ஒரு ஆண்மயிலை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்த மயிலும் அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சுற்றி திரிந்து வருவது வழக்கம். இதற்கிடையே திருத்தணி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

அதேபோல், நேற்று காலையும் குளிர்ந்த காற்று வீசியதில், மேகமூட்டத்துடன் சீதோஷ்ண மாற்றத்தை உணர்ந்த ஆண் மயில், திடீரென தோகை விரித்தாடியபடி சுமார் அரைமணி நேரம் அங்குமிங்குமாக வலம்வந்து நடனமாடியது.
இந்த அற்புத காட்சியை சிறுவர்-சிறுமிகள் உள்பட பல்வேறு கிராம மக்கள் கண்டு ரசித்தனர். மேலும், அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், அங்கு தோகை விரித்தாடும் மயிலை தங்களின் செல்போன் வீடியோவில் படம்பிடித்து, சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி