திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்டாவூர் கிராமத்தில் உள்ள சாலையானது கடந்த பல ஆண்டுகளாக போடப்படாமல் குண்டும், குழியுமாக மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் சாலையை நெடுஞ்சாலைத்துறை சாலையாக மாற்றியதாகவும், அதனால் ஊராட்சி நிர்வாகத்தால் சாலை போட முடியாத நிலை ஏற்பட்டதால், இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் சாலையை சீரமைக்கவில்லை என்றும், எனவே கண்டுகொள்ளாத நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு சாலை அமைக்க நவம்பர் மாதத்திற்குள் உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.