கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கியவரின் செல்போனை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (36). சொந்த ஊர் செல்வதற்காக நேற்று முன்தினம் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த இவர், அங்கிருந்த பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது இவரது செல்போனை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார். காலையில் கண்விழித்து பார்க்கும்போது செல்போனை காணவில்லை என்பதால் பதறிப்போன ரங்கராஜன், கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் விசாரணையை தொடங்கினர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீஸார், அதனடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட நபரை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பூண்டியைச் சேர்ந்த சுமன் (39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரங்கராஜனின் செல்போன் உட்பட மொத்தம் 3 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் சுமன் இருசக்கர வாகனத்தில் சென்று நோட்டமிட்டு, சாலையோரம் மற்றும் பேருந்து நிலையங்களில் தூங்கிக்கொண்டிருக்கும் நபர்களின் செல்போன்களை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர்.