சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க தெலுகு கங்கா ஒப்பந்தத்தின் படி கிருஷ்ணா நதி நீர் பூண்டியில் சேமிக்கப்பட்டு சென்னை குடிநீருக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 நீர்தேக்கங்களில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. கோடை தொடங்கியுள்ளதைடுத்து தண்ணீர் குறைந்து வருவதால் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீரை பெற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர். இதனையடுத்து வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட ஆந்திர பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நதி நீரால் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.