செங்குன்றம் அருகே பேராபத்து: ஜாக்கிரதை மக்களே!

6288பார்த்தது
செங்குன்றம் அருகே பேராபத்து: ஜாக்கிரதை மக்களே!
சென்னை, செங்குன்றம் அடுத்த வடகரை ஊராட்சி, சுடுகாடு- ரைஸ்மில் சாலையில் அரிசி ஆலை மற்றும் இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன.

அங்கு, அவற்றுக்காக பயன்படுத்தப்படும் மின் இணைப்புகள் தாழ்வாக தொங்குகின்றன. மின் வாரியத்தினர், அவற்றை தாங்கி பிடிக்க மூன்று இடங்களில் மரக்கட்டையால் மின்கம்பம் போன்று அமைத்துள்ளனர். அவை, வெயில், மழையில் காய்ந்து, உறுதியிழந்து முறிந்துள்ளன.

அதற்கும், மற்றொரு கம்பால் 'முட்டு' கொடுக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் உரசி சிமென்ட் மற்றும் இரும்பு மின் கம்பங்களே சேதமடையும் நிலையில், முறிந்த மின் கம்பத்திற்கு, முட்டு கொடுத்துள்ள மின் வாரியத்தின் இந்நடவடிக்கையால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போன்று, தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குமரன் நகரில் உள்ள 100க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில், 10க்கும் மேற்பட்டவை உறுதியிழந்து, சரிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன.

இதனால், விபத்து அபாயம் நீடிக்கிறது. எனவே, ஆபத்தான மின் கம்பங்களை கண்டறிந்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி