
வருஷநாடு சாலையில் சுற்றித் திரியும் காட்டு மாடுகள்
ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட வருஷநாடு மலைச் சாலைகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வனத்துறை அறிவுறுத்தல். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா உட்பட்ட வருஷநாடு, மேகமலை, வெள்ளிமலை சாலைகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் உள்ளது. வனப் பகுதியில் மழையின்றி வறட்சி நிலவுவதாலும், பிரசவ காலம் என்பதாலும் காட்டு மாடுகள் தண்ணீா் தேடி குளம், குட்டை போன்ற நீா்நிலைப் பகுதிகளுக்கு கூட்டமாக வந்து செல்கின்றன. எனவே, நீா்நிலைகளை அடுத்துள்ள பகுதிகள், மலைச் சாலைகளில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் சென்று வர வேண்டும். வருஷநாடு மலைச் சாலை வழியாக அரசரடி, பொம்முராஜபுரம் உள்ளிட்ட மலை கிராமங்களுக்குச் சென்று வரும் விவசாயிகள் பாதுகாப்புடனுடம், விழிப்புணா்வுடனும் இருக்க வேண்டும். மலைச் சாலையில் காணப்படும் காட்டு மாடுகளை விரட்டவோ, அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ கூடாது என்று வனத்துறையினா் எச்சரித்தனா்.