தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் கே. எம். காதர் மொகைதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் நின்று தோல்வியடைந்தோம். அதனால், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகளைத்தான் கேட்போம் என யாரும் நினைக்கக் கூடாது.
தமிழ்நாட்டில் எப்போதும் 8 தொகுதிகளில் நிற்பதுதான் எங்களுடைய இலக்கு. தற்போது மு. க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6 தொகுதிகளைக் குறையாமல் கொடுக்குமாறு வலியுறுத்துவோம். அதற்கான பேச்சுவார்த்தையை நாங்கள் தொடங்கவுள்ளோம்.கடந்த 1947, ஆகஸ்ட் 15 ம் தேதியன்று என்னென்ன கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்கள் இருந்ததோ, அவற்றை பாதுகாக்க வேண்டும் என நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991 கொண்டு வரப்பட்டது.
இதில், பாபர் மசூதிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி வழிபாட்டுத் தலத்தில் எந்த மாற்றத்தையும் அரசும், சமுதாயங்களும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்யப்பட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தையும், வேறுபாட்டையும், சண்டை சச்சரவுகளையும் உருவாக்குவது நியாயமானதல்ல. எனவே இச்சட்டத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்" என்றார் காதர் மொகைதீன்.