விநாயகர் சதுர்த்தியையொட்டி, தஞ்சாவூரில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் 85 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. இவற்றில் பல சிலைகள் சனி, ஞாயிறு கரைக்கப்பட்டன.
இந்நிலையில், 3 ம் நாளான நேற்று (செப்.9) மாலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.
இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஸ்ரீ விஸ்வரூப விநாயகர் விழாக் குழு அமைக்கப்பட்ட 45 சிலைகள், இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்ட 16 சிலைகள் என மொத்தம் 61விநாயகர் சிலைகள் ரயிலடிக்குக் கொண்டு வரப்பட்டன. பின்னர், நடைபெற்ற ஊர்வலத்துக்கு ஸ்ரீவிஸ்வரூப விநாயகர் குழு ஒருங்கிணைப்பாளர் விநாயகம் தலைமை வகித்தார்.
ஊர்வலத்தை மன்னார்குடி ஜீயர் ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைத்தார். பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிலைகள் காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கொடிமரத்து மூலை, கரந்தை வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, வடவாற்றில் கரைக்கப்பட்டன.
இதையொட்டி, நூற்றுக்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.