காய்ந்த நெற் பயிர்களை ஆடுகளுக்கு தீவனமாக்க்ம் விவசாயிகள்

547பார்த்தது
காய்ந்த நெற் பயிர்களை ஆடுகளுக்கு தீவனமாக்க்ம் விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே தண்ணீர் இல்லாததால் காய்ந்த நெற்பயிர்களை ஆடுகளுக்கு தீவனமாக்கினர்.

திருவையாறு வட்டாரத்துக்கு உள்பட்ட கீழத் திருப்பூந்துருத்தி, மேலத் திருப்பூந்துருத்தி, காட்டுக்கோட்டை பாதை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடி செய்யப்பட்டது. காவிரி நீர் வரத்து இல்லாததால், அருகிலுள்ள மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீர் பெற்று விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.

ஆனால், கடந்த 4 மாதங்களாக காவிரி நீர் வரத்து இல்லாததாலும், ஒரு மாதத்துக்கு மேலாக மழை பெய்யாததாலும் மோட்டார் பம்ப்செட்டுக்கும் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துவிட்டது. இதனால், ஆற்றுப்பாசனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.


காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து 2 டி. எம். சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், வெண்ணாற்றில் மட்டும் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு விடப்பட்டதே தவிர, தஞ்சாவூர் மாவட்டத்துக்குக் விடவில்லை. இதனால், திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப் பாசனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இப்பகுதிகளில் கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல், நிலங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு காய்ந்துவிட்டன. இப்பயிர்களை இனிமேல் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால், விவசாயிகள் ஆடுகளை விட்டு மேய்த்து வருகின்றனர்.

டேக்ஸ் :