மேட்டூர்: சேதுபாவாசத்திரத்தில் நீர் நிரம்பாத ஏரி, குளங்கள்

74பார்த்தது
மேட்டூர்: சேதுபாவாசத்திரத்தில் நீர் நிரம்பாத ஏரி, குளங்கள்
மேட்டூர் அணை திறந்து 65 நாட்களாகியும் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பாததால் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒருபோகம் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. டெல்டா பாசனத்திற்கு 28ஆம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. ஆனாலும் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் பெறக்கூடிய ஆடிப்பட்டம் கைகூடவில்லை. மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருந்தும் கடைமடைக்கு ஐந்து நாட்கள் வீதம் முறை வைத்து தண்ணீர் விடப்படுகிறது.

ஆனால் ஒருமுறை கூட ஐந்து நாட்கள் கடை மடைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் மேட்டூர் அணை திறந்து 65 நாட்களாகியும் இதுவரை விவசாயிகள் விதை நெல்லை கையில் எடுக்கவில்லை. அதேபோல் 2000 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர், ஊமத்தநாடு, ரெட்டவயல், நாடியம், கொரட்டூர் போன்ற பெரிய ஏரிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட சிறு குளங்கள் இதுவரை நிரம்பவில்லை. இதனால் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் உள்ளனர். முறையாக தண்ணீர் கிடைக்காமல் கடைமடையில் ஆடி பட்டம் மற்றும் நீண்ட கால ரகங்கள் சாகுபடி கைவிட்டு போனதை எண்ணி விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கடைமடைக்கு முறை வைக்காமல் தண்ணீர் விட்டால் மட்டுமே நாற்று விடும் பணியை தொடங்க முடியும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி