ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்பது நம் முன்னோர்களின் பழமொழி. ஆடி மாதத்தில் கடுமையான காற்று வீசும் என்பதை இந்த பழமொழி கூறுகிறது. பேராவூரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்றால் ஆங்காங்கே உள்ள மரம், செடி, கொடிகள் முறிந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதனால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த பலத்த காற்றால் புழுதி பறப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதேபோல் கடலுக்குள்ளும் பலத்த காற்று வீசி வருவதால் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் பகுதி மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் வீடுகளில் கொடியில் காய போட்டுள்ள துணிமணிகள் காற்றில் பறந்து அடுத்த வீடுகளில் விழும் நிலை உள்ளது. ஆங்காங்கே மரங்களில் கூடு கட்டி உள்ள பறவைகளின் கூடுகள் காற்றில் அடித்து செல்லப்பட்டு தரையில் விழுந்து கிடக்கும் நிலையும் உள்ளது. இதன் காரணமாக மனிதர்கள் மட்டுமல்ல பறவைகளும் சிரமப்பட்டு வருகின்றன.