தமிழ்நாட்டில் 240 வட்டாரங்களில் நிலத்தடி நீர் அபாயகரமான நிலையில் இருந்தாலும், அச்சப்படத் தேவையில்லை என மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் தென் கிழக்கு கடலோர மண்டல இயக்குநர் எம். சிவகுமார் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சகம், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீடித்த நிலத்தடி நீர் ஆதாரங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான நிலத்தடி நீர் வகைப்படுத்துதல் பணி செய்யப்பட்டது. இதில், அகில இந்திய அளவில் நிலத்தடி நீர் 60 சதவீதம் பாதுகாப்பான நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் 30 சதவீதம் பாதுகாப்பான நிலையில் இருக்கிறது. மீதமுள்ள 70 சதவீதம் பகுதி பாதி நெருக்கடி நிலையிலும், முழு நெருக்கடி நிலையிலும், அதிக அளவிலான சுரண்டல் நிலையிலும் உள்ளன. இந்த நிலைமை 240 வட்டாரங்களில் நிலவுகிறது.
எந்த மாநிலம் தொழிலிலும், வேளாண்மையிலும் முன்னோடியாக இருக்கிறதோ, அங்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இங்கு நிலத்தடி நீர் அதிக அளவில் சுரண்டப்படுகிறது என்றால், தமிழ்நாடு முன்னேறி வருகிறது என்பதுதான் அர்த்தமே தவிர, அதற்காக அச்சப்பட வேண்டிய தேவையில்லை என்றார் சிவக்குமார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொ) க. சங்கர், பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்.